மூன்று வழிப்பறி சம்பவங்கள் இருவருக்கு போலீஸ் 'காப்பு'

X
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் பிட்டு குமார் மாதோ, 26. வல்லம் பகுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி பணி முடிந்து, இரவு 8:00 மணிக்கு வல்லம் சிப்காட் சாலை வழியாக வல்லம் சென்றார்.ராயல் எண்பீல்டு தொழிற்சாலை அருகே சென்ற போது, ‛யமாஹா எம்.டி' பைக்கில் வந்த மூவர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிமிருந்து ‛ரெட் மீ' மொபைல் போனை பறித்து அங்கிருந்து தப்பினர். அதே கும்பல், அதே வழியாக சென்ற, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தேவி பிரசாந்த் சுனாலி, 18, என்பரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்தும் ‛ரெட் மீ' மொபைல் போனை பறித்து சென்றனர். இந்த இரு சம்பவங்களை தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் - சிங்பெருமாள் கோவில் சாலையில், உறவினர் வீட்டிற்கு சென்று, ‛ஸ்பிளண்டர்' பைக்கில் ஒரகடம் வழியாக சென்ற விஷால், 18, என்பரை வல்லக்கோட்டை அருகே வழிமறித்த இதே கும்பல், அவரிடமிருந்தும் ‛ரியல் மீ' மொபைல் போனை பறித்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் பெற்ற ஒரகடம் போலீசார் வழக்குபதிவு செய்து, தீவிர விசாரணை செய்தனர். வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட, வாலாஜாபாத் பூசிவாக்கம் பகுதியை சேர்ந்த தாமரை செல்வன், 18, சந்தோஷ், 20, இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். இருவரும் கழிப்பறை சென்றபோது வழுக்கி விழுந்து கைகளில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மாவுக்கட்டு போட்டபடி, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலுார் சிறையில் அடைத்தனர்.
Next Story

