வாய்மேட்டில் நடந்த காதுகுத்தல் நிகழ்ச்சிக்கு

X
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், பிரான்ஸ் நாட்டிற்கு மேல்படிப்பு படிக்கச் சென்றார். அங்கு இலங்கையை சேர்ந்த பிரசாந்தி என்ற பெண்ணும் படிக்க வந்து உள்ளார். இருவரும் கல்லூரியில் காதலித்து 2013- ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு சென்ற ஆண்டு பிரான்சில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு, தமிழக பாரம்பரிய முறைப்படி காதுகுத்தல் நடத்த வேண்டும் என தம்பதிகள் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, பிரான்ஸில் இருந்து உறவினர்கள் மூலம் மேற்கொண்டனர். பின்பு, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, கனடா, ஜெர்மனி, இலங்கையில் உள்ள தனது உறவினர்களுக்கு விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பை ஏற்று 5 நாடுகளில் இருந்து, 21 உறவினர்கள் விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து நாகை மாவட்டம் வேதாரணயம் அடுத்த வாய்மேடு வந்து சேர்ந்தனர். மணிவண்ணன், பிரசாந்தி தம்பதியினருக்கு பிறந்த ஆதிதேவ்விற்கு, தனது குலதெய்வம் கோவிலில் காது குத்துவதற்காக வாய்மேட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து, 101 தாம்பூலத்தில் வரிசை எடுத்து, வாய்மேடு சேனாதிக்காட்டில் உள்ள தனது குல தெய்வ கோவிலான வீரன் கோவிலை அடைந்தனர். வழிநெடுகிலும் நாட்டிய குதிரை, பொய்கால் குதிரை, கேரளா செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். பின்னர், கோவிலில் குழந்தை ஆதிதேவ்விற்கு மொட்டை அடித்து காது குத்தி உறவினர்களுக்கு விருந்து அளித்தனர். நிகழ்ச்சியில், மயிலாடுதுறை முன்னாள் எம்பி பி.வி.ராஜேந்திரன், அதிமுக அமைப்பு செயலாளர் துரை செந்தில் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள், ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு தம்பதியர் மற்றும் குழந்தையை வாழ்த்தினர். காதுகுத்தல் நிகழ்ச்சிக்கு, வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது உறவினர்களிடையே நீண்ட கால உறவை புதுப்பித்து மகிழ்ச்சி அடைத்தனர்.
Next Story

