வாழ்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்

20 நாட்களாக கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்குடி ஊராட்சியில், நடப்பாண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. வாழ்குடி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், சம்பா பருவத்திற்கு சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். 20 நாட்களுக்கு முன் அறுவடை செய்து கொண்டு வந்து சேர்த்த நெல் மூட்டைகள். இதுவரை கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால், கோடை மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. இதுகுறித்து, வாழ்குடி பகுதி விவசாயிகள் கூறியதாவது வாழ்குடியில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 20 நாட்களாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அலட்சியம் காட்டுகிறார்கள். இதனால் திடீரென பெய்யும் மழையில் நனைந்து நெல் முளைப்பு ஏற்படும் அபாயம் மற்றும் நெல் நிறம் மாறும் நிலை உள்ளது. இதனால், நெல்லை தினமும் பயந்து பாதுகாத்து வரும் நிலையில் உள்ளோம். அறுவடை பணிகள் முடிந்த பிறகும், நெல் விற்பனைக்காக பெரும் உழைப்பு செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும், விவசாய முதலாளிகளின் நெல் மூட்டைகளுக்கு கொடுக்கும் முன்னுரிமையை சிறு,குறு விவசாயிகளுக்கு கொடுக்க மறுத்து நெல் கொள்முதலில் தாமதம் ஏற்படுவதால், விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, இப்பகுதி நெல் கொள்முதல் நிலையத்தில், உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Next Story