காவேரிப்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

காவேரிப்பாக்கம் அடுத்த பாகவெளி கிராமம் சின்ன தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது இளைய மகன் தணிகைவேல் (வயது 36). பட்டதாரியான இவர் தந்தையுடன் விவசாயம் செய்துவந்தார். பாகவெளி கூட்ரோடு பகுதியில் இருந்து முசிறி கிராமத்திற்கு செல்லும் சாலையில் இவர்களுக்கு விவசாய நிலங்கள் உள்ளன. இந்தநிலையில் நேற்று தணிகைவேல் விவசாய வேலைக்காக நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது விவசாய நிலத்தில் மின் சாரம் ஒயர் அறந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் சென்ற தணிகைவேல் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

