ஆதமங்கலம் அருகே பழுதாகி நின்ற நகரப் பேருந்து

ஆதமங்கலம் அருகே பழுதாகி நின்ற நகரப் பேருந்து
X
பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி
திருவாரூரிலிருந்து மாவூர், வேப்பத்தாங்குடி, ஆதமங்கலம், சாட்டியக்குடி, வலிவலம், கொளய்பாடு, திருக்குவளை, எட்டுக்குடி வழியாக தலைஞாயிறு வரை பல்வேறு கிராமப்புறங்கள் வழியாக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக 18 என்ற எண் கொண்ட நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தபேருந்தில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என நாள்தோறும் ஏராளமானவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், எட்டுக்குடி முருகன் கோயிலுக்கு செல்பவர்களும் இந்த பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் பேருந்து மிகவும் பழைய பேருந்தாக உள்ளது. இதனால் அடிக்கடி பழுதாகி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அடிக்கடி பழுதாகி சாலையின் ஓரத்தில் நிற்பதால், பலரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் திருவாரூர் நோக்கி புதன்கிழமை மாலை சென்ற பேருந்து, ஆதமங்கலம் அருகே பழுதாகி நின்றது. மேலும், பேருந்தில் இருந்து டீசல் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்படாததால் மாணவர்கள் மட்டுமின்றி, அனைவரும் வெகுநேரம் காத்திருந்து, பின்னர் ஆட்டோவிலும், அவ்வழியே சென்ற மோட்டார் சைக்கிள்கள் மூலமாகவும் மாவூர் சென்று, அங்கிருந்து தங்களது பயணத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த வழித்தடத்தில், புதிய பேருந்தை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story