தைப்பூச தேர்த்திருவிழா சிவன்மலை தேர் நிலையை அடைந்தது

X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற திருத்தலமான சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தைப்பூசத் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 2-ந் தேதி மலையடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலிலும், 5-ந் தேதி கோவில் மலைமேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் 11-ந் தேதி காலை சுப்ரமணியசாமி வள்ளி, தெய் வானையுடன் ரதத்தில் எழுந்தருளினார். பின்னர் மாலை 4 மணிக்கு தேர்வடம் பிடிக்கப்பட்டு, பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு முதல் நிலையில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2-ம் நாளான நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மீண்டும் பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு மலையின் அடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 3-ம் நாள் நிகழ்வான நேற்று மாலை 5 மணி அளவில் மீண்டும் பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப் பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இரவு 7 மணி அளவில் தேர் அதன் நிலையை வந்தடைந்தது. தேர் நிலையை அடைந்ததும் பக்தர்கள் அனைவரும் கைத்தட்டி அரோகரா கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

