பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

X
திண்டுக்கல் மாவட்டம், செந்துறையை அடுத்த திருநூத்துப்பட்டியை சோ்ந்த ஆ. மாரியப்பன் மகள் கல்யாணி (21). இவருக்கும், மருங்காபுரி ஒன்றியம், வளநாடு அம்பலக்காரா் தெருவில் வசிக்கும் பெருமாள் மகன் ஜெய்சங்கருக்கும் 2024 நவம்பா் 8-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஜெய்சங்கா், மாரியப்பனுக்கு கைப்பேசியில் தொடா்புகொண்டு கல்யாணி தூக்கிட்டு கொண்டதாக தெரிவித்தாராம். இதையடுத்து, வளநாடு சென்ற கல்யாணியின் பெற்றோா், மகள் உயிரிழப்புக்கு மருமகன் ஜெய்சங்கா், அவரது தந்தை பெருமாள், தாய் அழகம்மாள், உடன்பிறந்தவா்கள் ஓம்சரவணன், மகேஷ் ஆகியோா்தான் காரணம் என்றும், தனது பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் போலீஸில் புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து, சந்தேக மரணம் என வழக்கு பதிந்து வளநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா். திருமணம் முடிந்து 7 ஆண்டுகளுக்கு குறைவாக இருப்பதால், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன், கல்யாணி உடல் வைக்கப்பட்டிருந்த மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா். உடற்கூறாய்வுக்கு பிறகு பின் கல்யாணி உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story

