விடுதியில் தங்கி படித்த மாணவன் மர்ம மரணம்

விடுதியில் தங்கி படித்த மாணவன் மர்ம மரணம்
X
இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்
நாகை மாவட்டம் நாகூர் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் சஞ்சய்ராம் (17). இவர் நாகை வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் செயல்படும் அரசு மாதிரி பள்ளி விடுதியில் தங்கி, பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சஞ்சய்ராமின் தந்தைக்கு விடுதி வார்டன் போன் செய்து, உங்களது மகன் விடுதியில் மயங்கி விழுந்து விட்டதாகவும், நாகை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக வரும்படி தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, அவருடைய மகன் சஞ்சய்ராம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, நாகை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதது காண்பவர்களை கண்கலங்க செய்தது. தகவலறிந்த, வெளிப்பாளையம் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, உயிரிழந்த மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விடுதியில் இறந்த மாணவர் சஞ்சய்ராம், தடுக்கி விழுந்ததில் உயிரிழந்ததாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தன்னுடைய மகனுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அவருடைய உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் சஞ்சய் ராமின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story