சேலத்தில் மிகப்பெரிய நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

சேலத்தில் மிகப்பெரிய நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
X
புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, பொதுப்பணி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, கூட்டுறவு, சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் 21 புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள வணிக வரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட உள்ள ரூ.42.49 கோடி மதிப்பிலான 21 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கல்வியும், மருத்துவமும் இரு கண்களாக கருதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் ரூ.1.60 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி கட்டிடங்கள் என பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் செயல்படுத்தி உள்ளார். அதேபோல், மருத்துவ துறையிலும் பாராட்டப்படும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் செயல்படுத்தி உள்ளார். குறிப்பாக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தை வெளிநாட்டு பிரதமர்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள். தொலைநோக்கு பார்வையோடு தமிழகத்தை உலக அளவில் தலைசிறந்த மாநிலமாக உயர்த்துவதற்காக மக்களுக்கான ஆட்சியை முதல்-அமைச்சர் நடத்தி கொண்டிருக்கிறார். எனவே அவரது தலைமையிலான பொற்கால ஆட்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். சேலம் மாநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நூல்களை அதிகமாக படிக்கும் ஆர்வலர்களின் வசதிக்காக சேலத்தில் மிகப்பெரிய நூலகம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
Next Story