சாலை மறியல்

X
சென்னிமலை அருகே 2 நாட்களாக விவசாயிகள் நடத்திய சாலை மறியல் போராட்டம் காரணமாக வெவ்வேறு பாதைகளில் வாகனங்களை போலீசார் திருப்பி விட்டனர். சென்னிமலை அருகே ராமலிங்கபுரத்தை சேர்ந்த விவசாயி நல்லசிவம் என்பவரின் ஆட்டுப்பட்டியில் புகுந்து கடந்த 2 தினங்களில் 25-க்கும் மேற்பட்ட ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றது. இறந்த ஆடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி ஏற்கனவே தெரு நாய்களால் ஆடுகளை பறி கொடுத்த விவசாயிகளும் ஒன்றிணைந்து சென்னிமலை காங்கேயம் ரோட்டில் ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையான திட்டுப்பாறை பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சாலை தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் சாலை மறியல் போராட்டத்தால் ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே வரிசையில் நின்றன. பின்னர் மாற்றுப்பாதை மூலம் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. அதேபோல் பெருந்துறையிலிருந்து சென்னிமலை வழியாக காங்கேயம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் அப்பத்தாள் கோவில் அருகே தடுத்து நிறுத்தி சின்ன பிடாரியூர் வழியாக வெள்ளோடு ரோட்டுக்கு செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டது. பின்னர் வெள்ளோடு ரோடு வழியாக வந்த வாகனங்கள் நாமக்கல்பாளையம் வழியாக அறச்சலூர் ரோட்டை அடைந்து அங்கிருந்து அறச்சலூர் வழியாக காங்கேயம் செல்லும் வகையில் வாகனங்களை திருப்பி விடப்பட்டது. சென்னிமலை அருகே நொய்யல் பகுதியிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடும் பணியில் ஈடுபட்டனர். சாலை மறியல் நடந்த இடத்தில் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாது என்பதால் இருசக்கர வாகன ஓட்டிகளும் மாற்று பாதையில் நீண்ட தூரம் சென்று தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். 2 நாட்கள் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் தைப்பூசத்தை முன்னிட்டு பழனி சென்ற பக்தர்கள் மற்றும் பழனியில் இருந்து திரும்பி வந்த பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
Next Story

