தமிழ் மரபுக் கலையை எடுத்துச் செல்ல தமிழ் பல்கலைக்கழகம் - தஞ்சை வேல் அமிர்தம் கல்லூரி ஒப்பந்தம்

X
தமிழ் மரபுக் கலையை சமுதாயத்திற்கு எடுத்துச் செல்ல, தமிழ்ப்பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையம் தஞ்சை வேல் அமிர்தம் சமுதாயக் கல்லூரி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழக அரசின் நிதி நல்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன், தஞ்சை வேல் அமிர்தம் சமுதாயக் கல்லூரியுடன் தர வகுப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை வேல் அமிர்தம் சமுதாயக் கல்லூரி, கடந்த 15 ஆண்டுகளாக தஞ்சை மாவட்டத்தில் சிறந்த சமுதாயப்பணியினை ஆற்றி வருகின்றது. இந்நிறுவனத்தின் வாயிலாக நம்முடைய பழந்தமிழர் கலைகள் கற்பிக்கப்பட்டு பல்வேறு அரங்குகளில் மேடையேற்றப்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் வாயிலாக இசை, நடனம் மற்றும் சிலம்பக் கலைகளை தரநிலையில் கற்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வொப்பந்ததின் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் வாயிலாக நடத்தப்பெறும் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், நாட்டுப்புறக்கலைகள், சிலம்பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் தஞ்சை வேல் அமிர்தம் சமுதாயக் கல்லூரி வாயிலாக நடத்தப்பெற்று தமிழ்ப் பல்கலைக்கழகம் வழித் தேர்வுகள் நடத்தவும் சான்றிதழ் வழங்கவும் வகை செய்யப்படும். தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம், தஞ்சை வேல் அமிர்தம் சமுதாயக் கல்லூரி நிறுவனர் சிவக்குமார், இயக்குநர் சியாமளா ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாற்றிக்கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநர் செ.கற்பகம், உதவியாளர்கள் கோ.ராஜேந்திரன், கார்த்திகேயன், சித்ரா, இளநிலை உதவியாளர் தெ.பூங்குன்றன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story

