இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி இரண்டாவது நாள் சாலை மறியல்

X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வெறி நாய்கள் கடித்து குதறியதில் ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இதனால் விவசாயிகள் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவன்மலை, சென்னிமலை ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் கடித்து 23 ஆடுகள் உயிரிழந்த நிலையில் விவசாயிகள் தமிழக அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் 1 மணியில் இருந்து காங்கேயம்- சென்னிமலை சாலை திட்டுப்பாறை அருகே பாரவலசில் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால் நேற்று காலை 2வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என்.நடராஜ் மற்றும் கட்சியினர், பா.ஜனதா கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு விவசாயிகளுடன் அமர்ந்து ஆதரவு தெரிவித்தனர். இதற்காக விவசாயிகள் விடிய விடிய போராட்ட களத்தில் தங்கினர். இதன் காரணமாக மாநில நெடுஞ்சாலை எண் 96ல் சுமார் 30 மணி நேரம் காங்கேயம் சென்னிமலை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
Next Story

