நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் பணி புறக்கணித்து தர்ணா போராட்டம்
நாகை வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரியில், பணியாற்றும் பேராசிரியர்களுக்கு கடந்த ஒரு வருடமாக ஊதியம் வழங்காத காரணத்தால் கடும் சிரமத்தை சந்தித்து வருவதுடன், பேராசிரியர்களுக்கு 83 மாதங்களாக பிடித்தம் செய்யப்படும் சேமநலநிதியும் அரசு கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதை கண்டித்து, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர்களின் பணி புறக்கணிப்பு காரணமாக, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் இப்பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி ஆட்சி குழு தலைவர் எழிலரசி மனோகரன் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி அரசு அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும். பணியாளர்களுக்கான ஊதியம் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையரிடமிருந்து, ஊதிய மானியத் தொகை பெற்று, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இயக்குன ரகத்திலிருந்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஊதிய மானிய தொகை பெறப்பட்டு, பணியாளர்களுக்கு ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை ஊதிய மானியத்தொகை விடுவிக்கப்படவில்லை. மானிய தொகையை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊதிய மானிய தொகை விடுவிக்கப்பட்ட உடன், அனைத்து பணியாளர்களுக்கும் உடனடியாக ஊதியம் பட்டுவாடா செய்யப்படும். கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 93 பணியிடங்களில், 62 பணியிடங்களை நிரப்ப, இயக்குனர் அலுவலகத்திற்கு கடந்த 2011 -ம் ஆண்டு முதல் கடிதம் எழுதப்பட்டு, இதுவரை பணியாளர் தேர்வு குழு நடத்திட அனுமதி கிடைக்கவில்லை. மாணவர் மற்றும் ஆசிரியர் நலன், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக அங்கீகாரம் பெறுவதற்கும் நிர்வாகம் கடந்த 2011 -ம் ஆண்டு முதல் காலி பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பி ஊதியம் ரூ.3.48 கொடி வழங்கியதால், நிர்வாகத்திற்கு அதிக நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. நிதிச் சுமை காரணமாக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பண பயன்கள் மற்றும் ஆசிரியர் சேம நல சந்தா தொகை செலுத்த முடியவில்லை. நிதிச்சுமையை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதிச் சுமை சரி செய்யப்பட்ட பிறகு அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story



