மேம்பாலம் பணிகள் நிறைவு

மேம்பாலம் பணிகள் நிறைவு
X
பள்ளிபாளையம் மேம்பால பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் பாலத்தை திறக்கும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த திருச்செங்கோடு சாலையில் சென்னை -கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ் ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலையின் விரிவாக்கப்பணி நடைபெற்று வந்தது. இதில் தோக்கவாடியிலிருந்து ஆலாம்பாளையம் வரை நான்கு வழிச் சாலையானது கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.  மேலும் ஆலாம்பாளையம் முதல் பள்ளிபாளையம் வரை 4- கிலோமீட்டர் மேம்பால பணிகள் நடைபெற்று வந்தது, அரசின் நிதி பற்றாக்குறையினால் சிறிது காலம் வேலையில் தொய்வு ஏற்பட்டது. அப்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையினாலும், நெடுஞ்சாலைத்துறையினரின் ஒத்துழைப்புடனும் மேம்பால பணி கால அவகாசத்திற்குள் நிறைவு பெற்றது.  இம்மேம்பாலம் எப்போது பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இப்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் பள்ளிபாளையத்தில் போக்குவரத்துக்கு நெரிசல் மிகவும் குறையும், குறிப்பாக ஈரோட்டிலிருந்து திருச்செங்கோடு மார்க்கமாக நாமக்கல், ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள், பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில்   சேலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பாலத்தில் பொருத்தப்பட்ட தூண்களின் உறுதித் தன்மை மற்றும், கடினத்தன்மை குறித்து நவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். ஓரிரு நாளில் அனைத்து ஆய்வுகளையும் முடித்துக் கொண்டு அதி விரைவாக மேம்பாலத்தை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.  இம்மேம்பாலத்தினை விரைவில்  பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Next Story