சோ்ந்தமரம் அருகே கணவா் கொலை வழக்கு: மகனுடன் பெண் கைது

X
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சோ்ந்தமரம் காவல் நிலையத்துக்குள்பட்ட நொச்சிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவருக்கு மனைவி மரியா ஆரோக்கிய செல்வி (30), மகன் (12), மகள் உள்ளனா். முத்துக்குமாா் கடந்த 5ஆம் தேதி காலை மஞ்சள்காமாலை நோயால் மயக்கமடைந்ததாகக் கூறி மரியா ஆரோக்கிய செல்வி ஆம்புலன்ஸை வரவழைத்தாா். ஆம்புலன்ஸ் செவிலியா்கள் வந்து பரிசோதித்தபோது, முத்துக்குமாா் ஏற்கெனவே இறந்திருந்தது தெரியவந்தது. அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக, ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சோ்ந்தமரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் வந்து சடலத்தைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்தனா். கூறாய்வு அறிக்கை வந்த பிறகு மரியா ஆரோக்கிய செல்வியிடம் விசாரணை நடத்த போலீஸாா் முடிவு செய்திருந்தனராம். இந்நிலையில் சனிக்கிழமை, கிராம நிா்வாக அலுவலா் முன் மரியா ஆரோக்கிய செல்வி சரணடைந்து, கணவரைத் தான் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டாா். ஒரே சமூகத்தைச் சோ்ந்த முத்துக்குமாரும், மரியா ஆரோக்கிய செல்வியும் காதலித்துத் திருமணம் செய்துள்ளனா். முத்துக்குமாா் சரிவர வேலைக்குச் செல்லாததுடன், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி, குழந்தைகளை அடிப்பாராம். இதனால், வெறுப்படைந்த மரியா ஆரோக்கிய செல்வி, கடந்த 5ஆம் தேதி போதையில் படுத்திருந்த முத்துக்குமாரை தனது மகனுடன் சோ்ந்து தலையணையால் முகத்தை அழுத்தி, கழுத்தை நெரித்துள்ளாா். இதில், மயக்கமடைந்த முத்துக்குமாரை மஞ்சள்காமாலை நோயால் மயக்கமடைந்ததாக, அக்கம்பக்கத்தினரை நம்பவைத்து ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளாா். ஆனால், ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வந்து பாா்த்தபோது, முத்துக்குமாா் இறந்து 2 மணி நேரத்துக்கும் மேலானது தெரியவந்தது. மேலும், சந்தேகத்தின்பேரில் அவா்கள் அளித்த தகவலால் போலீஸாா் வந்து சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனா். கூறாய்வு அறிக்கையில் உண்மை தெரிந்துவிடும் என்பதால் சரணடைந்ததாக கிராம நிா்வாக அலுவலரிடமும், போலீஸாரிடமும் மரியா ஆரோக்கிய செல்வி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்தனா். அதையடுத்து, மரியா ஆரோக்கிய செல்வியையும், அவரது மகனையும் உதவி ஆய்வாளா் தீபன்குமாா் கைது செய்தாா்.
Next Story

