வலையில் சிக்கிய ஆலிவர் ரெட்லி ஆமையை மீட்டு

கடலில் விட்ட இயற்கை ஆர்வலர்களுக்கு பாராட்டு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம், நாலுவேதபதி, ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில், ஆலிவர் ரெட்லி கடல் ஆமைகள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடலிலிருந்து கரைக்கு வந்து, மணற்பாங்கான பகுதிகளில் குழிதோண்டி முட்டைகளை இட்டுச் செல்வது வழக்கம். இந்த முட்டைகளை, வனத்துறையினர் சேகரித்து கோடியக்கரை, ஆறுகாட்டுதுறையில் உள்ள ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து, 45 முதல் 55 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் அதை எடுத்து கடல் விடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று பெரியகுத்தகை கடற்கரைக்கு வந்த ஆலிவர் ரெட்லி ஆமை கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த மீன்பிடி வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் அறிவானந்தம், மகேஸ்வரன் ஆகியோர் மீனவர்களின் உதவியோடு வலையில் அகப்பட்டு இருந்த ஆலிவர் ரெட்லி ஆமையை வலையுடன் கரைக்கு இழுத்து வந்து, வலையில் அகப்பட்டிருந்த ஆமையை விடுவித்தனர். பின்னர், ஆலிவர் ரெட்லி ஆமையை கடலில் விட்டனர். உயிருக்கு போராடிய ஆமையை மீட்டு நேற்று கடலில் விட்டவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
Next Story