தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரிக்கு ஐந்தாவது முறையாக தேசிய தரச் சான்றிதழ்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரிக்கு ஐந்தாவது முறையாக தேசிய தரச் சான்றிதழ்
X
தரச்சான்று
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி ஐந்தாவது சுழற்சியில் தேசிய தர மதிப்பீட்டுக்குழு அறிக்கையின் படி,  ஏ தகுதி நிலையைப் பெற்றுள்ளது . தஞ்சாவூரில் அமைந்துள்ள குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் தன்னாட்சிக் கல்லூரி, 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் தங்கி உயர்கல்வி பயிலும் நிறுவனமாகும். இக்கல்லூரியில் 14 துறைகளில் இளநிலைப் பட்ட வகுப்புகளும், 13 துறைகளில் முதுநிலைப்பட்ட வகுப்புகளும், 9 துறைகளில் ஆய்வு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. 4,295 மாணவிகள் இங்கு கல்வி பயில்கின்றனர். 2000 ஆண்டு முதல் நான்கு முறை இக்கல்லூரிக்குத் தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்து சான்றளித்துள்ளது. இந்நிலையில்  (பிப்ரவரி மாதம் 6, 7 தேதிகளில்) ஐந்தாவது முறை தரமதிப்பீடு மேற்கொள்ள தேசிய தர மதிப்பீட்டு ஆய்வு குழுவினர் வருகை தந்தனர். தமிழக அரசுக் கல்லூரிகளிலேயே ஐந்தாவது முறையாக இந்த மதிப்பீட்டுக்குச் செல்லும் முதல் கல்லூரி என்ற பெருமையை இக்கல்லூரி பெற்றது. தேசிய தர மதிப்பீட்டுக்குழு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் ஏ தகுதி நிலையை வழங்கியுள்ளது ஏ தகுதி நிலையைப் பெற்றிட அனைத்து ஏற்பாடுகளையும் இக்கல்லூரி முதல்வர் அ.ஜான் பீட்டர் தலைமையில், உள் தர உறுதிக் குழுத் தலைவர் முனைவர் க.பானுகுமார் மற்றும் உறுப்பினர்கள் ,தேர்வு நெறியாளர் முனைவர் தெ.மலர்விழி மற்றும் துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும் மேற்கொண்டனர். இந்த ஆய்வுக் குழுவில் குஜராத் மாநிலம், ஹேமச்சந்திரா வடக்கு குஜராத் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ஹெக்ஸிமா ராவ் தலைமையில், மத்தியப் பிரதேசம், இந்தூர், தேவி அகில்யா பல்கலைக்கழகத்தின் வேதி அறிவியல் பேராசிரியர்   பிரதிபா ஷர்மா (உறுப்பினர் செயலர்), மஹாராஷ்ட்ரா மாநிலம், மும்பை எம்.எல் தனுகர் வணிகவியல் கல்லூரியின் மேனாள் முதல்வர் பேராசிரியர் மாதவி பதே (உறுப்பினர்) அவர்களும் அடங்கிய மூவர் குழுவினர் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி மற்றும் ஆய்வின் தரம், தேர்ச்சி நிலை, பாடத்திட்டம், சேவை அமைப்புகளின் பணி, வேலைவாய்ப்புப் பயிற்சி, வளாகப் பணி வாய்ப்பு நேர்காணல் முகாம்கள் கருத்தரங்குகள், மாணவர் பெற்றோர் திருப்தி நிலை, விடுதிகளின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தமிழக அரசின் பிரதிநிதியாகத் தஞ்சை மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குனர் து.ரோசி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக சுற்றுச் சூழல் துறைப் பேராசிரியர் டி. சிவசுதா இந்த மதிப்பீட்டில் உடன் பங்கேற்றனர். முன்னாள், இந்நாள் மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் மதிப்பீட்டிற்கு தனது பங்களிப்பை செய்திருந்தனர் . இக்குழு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் ஏ தகுதி நிலையை கல்லூரி பெற்றுள்ளது . கல்லூரி தேசிய தரமதிப்பீட்டில் ஏ தகுதிநிலை பெற்றதைப் பாராட்டி உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சை மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் து.ரோசி உள்ளிட்டோர் கல்லூரி முதல்வருக்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story