முத்தூர் நூல் மில்லில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் பஞ்சு எரிந்து சேதம்

X
வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். முத்தூர் அருகே சின்னமுத்தூர் தண்ணீர் பந்தல் பகுதியில் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நூல் மில்லின் உள்ளே எந்திரங்கள் இயங்கி கொண்டிருந்தது. அப்போது மில்லின் ஒரு பகுதியில் திடீரென்று தீ பிடித்தது. இந்த தீ மளமளவென்று கட்டிடத்தின் உள்ளே இருந்த எந்திரங்கள் பகுதி முழுவதும் வேகமாக பரவி அருகில் இருந்த பஞ்சுகளில் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த நூல் மில் ஊழியர்கள் தீ அணைப்பான் கருவி மற்றும் தண்ணீர் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஊழியர்கள் அனைவராலும் தீயை முற்றிலும் அணைக்க முடியவில்லை. இதையடுத்து வெள்ளகோவில், காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 தீயணைப்பு நிலைய வாகனங்கள் மூலம் ராட்சத குழாய்கள் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நூல் உற்பத்தி செய்யும் எந்திரங்கள், பஞ்சு பேல்கள், மின்சாதன பொருட்கள், கட்டிடம் அனைத்தும் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Next Story

