பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கழிவுநீர் தேக்கம்

X
பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கழிவுநீா் தேங்கியிருப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்து நிலையத்திற்கு சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்தப் பேருந்து நிலையத்தில் மழைக்காலங்களில் பெரும் அளவு தண்ணீா் தேங்கி நிற்பது வாடிக்கையாக இருந்து வந்த நிலையில், தற்போது கழிவுநீரும் பேருந்து நிலையம் அருகே தேங்கி இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா். நிலையத்தில் அதிராம்பட்டினம் பேருந்துகள் வந்து செல்லும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை பெருமளவு கழிவுநீா் தேங்கி நின்றதால் பொதுமக்களும் பயணிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். இதுகுறித்து சமூக ஆா்வலா் நம்பிவயல் ஸ்ரீதரன் கூறுகையில், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கழிவுநீா் மேலாண்மையை முறையாக மேற்கொள்ளாததால், பொதுமக்களுக்கு சிரமமும் சுகாதாரக் கேடுகளும் ஏற்பட்டுள்ளன. தேங்கி நிற்கும் நீா் மற்றும் துா்நாற்றம் காரணமாக பயணிகள் பேருந்துகளுக்காகக் காத்திருப்பதிலும், அருகிலுள்ள கடைக்காரா்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவு நீா் தேங்கியிருப்பது கொசு பெருக்கத்திற்கு வழிவகுத்து, டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கும் வழிவகுக்கும். இந்தப் பிரச்சினையைத் தீா்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேருந்து நிலையப் பகுதியின் தூய்மை மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய முறையான கழிவுநீா் அகற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்தி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிரந்தர தீா்வை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
Next Story

