பொதுமக்கள் சாலை மறியல்

X
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ராமலிங்கபுரம் குட்டையகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன் (வயது 35) விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 20 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு நேற்று அதிகாலையில் தனது ஆட்டுப்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு 10 ஆடுகள் தெரு நாய்களால் கடிபட்டு இறந்து கிடந்ததையும் மேலும் சில ஆடுகள் உயிருக்கு போராடி கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. பின்னர் உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து இறந்த ஆடுகள் மற்றும் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆடுகளை ஒரு டிராக்டரில் போட்டு சென்னிமலையில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக நேற்று காலை 7.30 மணி அளவில் சென்னிமலையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து சென்று சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் காந்தி நகர் என்ற இடத்தில் போலீஸ் ஜீப்பை குறுக்கே நிறுத்தி டிராக்டர் செல்ல முடியாமல் தடுத்தனர். இதனால் விவசாயிகள் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிரடி படையினர் 15-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களில் வரவழைக்கப்பட்டனர். மேலும் ஈரோடு ஆர்.டி.ஓ ரவி, பெருந்துறை தாசில்தார் செல்வகுமார், பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் தி.மு.க, அ.தி.மு.க, பாரதிய ஜனதா கட்சி மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆடுகளை பறி கொடுத்த விவசாயிகள் அனைவருக்கும் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இனிமேல் ஆடுகளை பாதுகாக்க தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து இறந்த ஆடுகளுடன் சாலை ஓரம் அமர்ந்து கொண்டனர். பின்னர் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை நேரில் சந்திக்க அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆடுகளை இழந்த விவசாயிகள் ஈரோட்டுக்கு சென்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த ஆடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி சென்னிமலை - காங்கேயம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் விவசாயிகள் ஈடுபட்டதால் சுமார் 30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் அதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சென்னிமலை, அறச்சலூர், கொடுமுடி, மலையம்பாளையம், ஊத்துக்குளி ஆகிய ஊர்களில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story

