மக்கள் எதிர்ப்பு

X
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையானது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையில் இருந்து குண்டேரிப்பள்ளம், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல தனியார் சிலர் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக குழாய் அமைக்கும் பணியும் கடந்த சில நாட்களுக்கு முன் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை அருகே விவசாய நிலத்தில் போடப்பட்டு உள்ள ஆழ்குழாய் கிணறு அனுமதி இல்லாமல் போடப்பட்டு உள்ளதாகவும், அனுமதி இல்லாமல் போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை மூட வலியுறுத்தி கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் டி.என்.பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர் .கிராம மக்களின் சாலை மறியல் காரணமாக அந்தியூர் - கோபி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 கும் மேற்பட்ட கிராம மக்களை பங்களாபுதுர் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.
Next Story

