ராமநாதபுரம் ராமேஸ்வரம் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது:

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றம் நடைபெற்றது
ராமநாதபுரம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றம் நடைபெற்றது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடி திருக்கல்யாணம், மாசி மகா சிவராத்திரி முக்கிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மகா சிவராத்திரி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று காலை சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளான வரும் 26ந்தேதி சிவராத்திரி அன்று காலை திருதேரோட்டமும் இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். அதை தொடர்ந்து வரும் 27ந் தேதி மறைநிலா அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் ஸ்ரீராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று அக்னிதீர்த்த கடலில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளதால் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை விரிவாக செய்யப்பட்டுள்ளது.
Next Story