அரியலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருள்களை வாங்குவோர் } விற்பனையாளர் சந்திப்புக் கூட்டம்

X
அரியலூர், பிப்.19- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருள்களை வாங்குவோர்}விற்பனையாளர்கள் சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி, தொடக்கி வைத்து பேசியது: மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருள்களை காட்சிப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடைய செய்தல் வேண்டும். அவர்களின் பொருள்களை தொடர்ந்து கொள்முதல் செய்திடும் வகையில் உற்பத்தியினை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் . அதன் மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்க செய்திட வேண்டும். அப்பொருள்களை அதிக எண்ணிக்கையிலான நுகர்வோர்களை சென்றடைய செய்தல் வேண்டும். ஒரே தயாரிப்பை அதிக மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் நிலையில், அத்தகைய தயாரிப்புகளை ஒருங்கிணைத்து அதிக அளவில் விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கையின் மூலம் எந்தவித இடைதரகர்கள் இன்றி மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகள் நேரடியாக கொள்முதலாளர்களை சென்றடைய முறையான வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சில தயாரிப்புகளுக்கு மாவட்ட அளவில் குறைந்த அளவில் கொள்முதல் செய்யும் பட்சத்தில், மாநில அளவில் வேறு மாவட்டங்களில் உள்ள கொள்முதலாளர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுத்தல் வேண்டும். ஒவ்வொரு தயாரிப்பின் தரம், கொள்முதல் விலை, கொள்முதல் செய்ய உத்தேசித்துள்ள அளவு, அதற்கான காலம் போன்றவற்றை உள்ளடக்கி, கொள்முதல் செய்பவர்களும், விற்பனை செய்பவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்த செய்து கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக அவர், மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிப்பு பொருள்கள் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருள்களின் வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை வழங்கினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லட்சுமி, மாவட்ட வணிகர் சங்க தலைவர் ராஜா, மாவட்ட மேலாளர் (சந்தை)கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

