அரியலூரில் நக்சா திட்டம் தொடக்கி வைப்பு

அரியலூரில் நக்சா திட்டம் தொடக்கி வைப்பு
X
அரியலூரில் நக்சா திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.
அரியலூர், பிப்.19- அரியலூர் மாவட்டத்தில், நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டம் செவ்வாய்க்கிழமை தொடக்கி  வைக்கப்பட்டது. இதற்காக அரியலூர் ராஜாஜி நகர், 2 ஆவது தெருவில், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, குத்துவிளக்கேற்றி, நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தினை தொடக்கி வைத்து, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் அவர் தெரிவித்தது: நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நக்சா திட்டமானது அரியலூர் நகரத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு, புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களை உருவாக்கி, அவற்றை உள்ளாட்சி அமைப்புகளால் பேணப்படும் சொத்துவரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.நிலஅளவை செய்து தயார் செய்யப்பட்ட வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்கள் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்துகொள்ளலாம்.அவை விதிகளின்படி பரிசீலித்து தீர்வு காணப்படும். இதன் தொடர்ச்சியாக இறுதி செய்யப்பட்ட நகர்ப்புற நில ஆவணங்கள் வெளியிடப்படும். அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த பின்னர் புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களும், சொத்துவரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நில ஆவணங்கள் நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும். எனவே, நக்சா திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த அரசு அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, நகர்மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், நில அளவை உதவி இயக்குநர் கண்ணன், நகராட்சி ஆணையர்(பொ)அசோக்குமார்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :
Next Story