குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் திறந்த நிலையில் பழமை வாய்ந்த கிணறு

X
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சியில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுடைய தண்ணீர் தேவைக்கு, குத்தாலம் ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், கிணறு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிணற்றை, சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது, அக்கிணறை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை. இந்நிலையில், மெயின் ரோட்டில் அமைந்துள்ள கிணற்றின் அருகில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், ஆபத்தை உணராமல் கிணற்றை அருகில் சென்று எட்டிப் பார்த்தும், கல் வீசியும் விளையாடி வருகின்றனர். இதனால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து, குத்தாலம் ஊராட்சி மன்ற அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் கிணற்றின் மேல் மூடி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

