உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்

பள்ளி மாணவர்களிடம் அடிப்படை வசதிகளை குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட சாத்தனூர் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அனைத்துத் துறைகளின் மாவட்ட நிலை அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமைகளில் வட்ட அளவில் அரசின் திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் ஆலத்தூர் வட்டத்தில் நடைபெற்ற இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் சாத்தனூர் ஊராட்சி கிராம செயலக அலுவலகத்தில், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாணவ மாணவிகளின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்யும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறை மூலம் மாணவ, மாணவிகளுக்கு கணிதப் பாடம் கற்பிக்கப்படுவதையும், தொடர்ந்து கணித ஆய்வகத்தில் மாணவர்களுக்கு நவீன முறையில் கற்பிக்கும் முறை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவ,மாணவிகளுக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவின் தரம் மற்றும் சுவை குறித்து சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தார். உணவு தயாரிக்க தேவையான உணவு பொருட்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளதா எனவும், தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.7.7 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டி ஏரி முதல் சோயான் குட்டை வரை வரத்து வாய்க்கால் அகலப்படுத்தி, பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, இன்று வருகை புரிந்துள்ள பணியாளர்கள் விபரங்களை பணிப்பதிவேடு மூலம் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியங்களை உரிய காலத்தில் பெற்று வழங்கிட வட்டார வளர்ச்சி அலுவலர்க்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். பின்னர், சாத்தனூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்(ஊரகம்) ஆகிய திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணி முன்னேற்ற நிலை குறித்து அளவீட்டு பார்த்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தவும், அனைத்து வீடுகளும் இந்த நிதியாண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டு, அதற்கான உரிய தொகையினை வழங்கிட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்க்கு அறிவுறுத்தினார் தொடர்ந்து, சாத்தனூர் குழந்தைகள் மையத்தில், மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகளின் எடை, வளர்ச்சி, குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பது குறித்தும், அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, இன்றைய உணவு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வுகளில், ஆலத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story