ராமநாதபுரம் மீன் வியாபாரிகள் சாலை மறியல் செய்தனர்
ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் சாலை ஓரம் செயல்பட்டு வந்த 20க்கும் மேற்பட்ட மீன் கடைகளை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக ராமநாதபுரம் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தியதுடன் மீன்களை பறிமுதல் செய்து குப்பை வண்டியில் ஏற்றியதால் மீன் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் சின்னகடை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 20க்கும் மேற்பட்டோர் சாலை ஓரம் மீன் கடை நடத்தி வருகின்றனர். மீன் வியாபாரிகள் சாலையில் சாக்கை விரித்து அதில் மீன்களை போட்டு மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தினசரி 6 மணி முதல் 10 மணி வரை மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சாலையோர மீன் கடைகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக சின்னக்கடை பகுதி வசிக்கும் மக்கள் ராமநாதபுரம் நகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இன்று திடீரென ராமநாதபுரம் நகராட்சி ஊழியர்கள் சாலை ஓரம் இருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளை அப்புறப்படுத்தியதுடன், கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களை அள்ளி குப்பை வண்டியில் போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மீன் கடை வியாபாரிகள் நகராட்சி குப்பை வண்டியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கடையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குப்பை வண்டியில் வீசிய மீனுக்கு பணம் கொடுக்க வேண்டும் என மீன் கடை உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது மீன் கடை உரிமையாளரான மூதாட்டி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார். இதனைஅடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார் சக கடை உரிமையாளர்கள்ய மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்ததுடன், நகராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சாலையோர மீன் கடை உரிமையாளர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது
Next Story





