கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆடுகள் திருடிய பெண் கைது தம்பதி போல் நடித்து பல்வேறு இடங்களில் கைவரிசை

X
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த செம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவர் கடந்த 15-ந் தேதி ஆடுகளை மேய்ச்சலுக்காக தோட்டத்தில் விட்டுவிட்டு வீட் டிற்கு வந்து விட்டார். அதன்பின்னர் சென்று பார்த்த போது அதில் ஒரு ஆட்டை காணவில்லை. இதுகுறித்து குண்டடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடர்களை தேடி வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் பெண்ணுடன் சேர்ந்து ஆட்டை பிடித்து கொண்டு சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் குண்டடம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி போல் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆ.கலைய முத்தூர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் கணேசன் (வயது 36) என்பதும், அந்த பெண் தாராபுரம் கொண்டரசம்பாளையத்தை சேர்ந்த சித்ரா (46) என்பதும் தெரிய வந்தது. சித்ராவின் கணவர் இறந்துவிட்டதால் கணேசன் என்பவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிஉள்ளது. இவர்கள் 2 பேரும் தம்பதி போல் நடித்து வெங்கடசாமி ஆடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் ஆடுகளை திருடி சென்று இருப்பதும் தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சாலை ஓரங்களில் மேய்ச்சலில் விடப்பட்ட ஆடுகளை திருடிச் சென்று கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

