விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

X
விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27 ஆவது மாநில மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. இதில், கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தது. இதை நிறைவேற்ற வலியுறுத்தி தில்லியில் 13 மாத காலம் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பல்வேறு அடக்குமுறைகள் கையாளப்பட்டதால், 714 விவசாயிகள் உயிரிழந்தனர். இதன் விளைவாக ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தது. ஆனால், 2 ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒன்றிய அரசு உடனடியாக குறைந்த பட்ச ஆதார விலையை சட்டமாகக் கொண்டு வர வேண்டும். கோயில் மடம், மத நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை, குடியிருப்பாளர்களை நில வெளியேற்றம் செய்யக்கூடாது. சாகுபடி மற்றும் குடியுரிமை வழங்கி பாதுகாக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023ஐ திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.குணசேகரன், மாநிலத் துணைத் தலைவர் எம். இலகுமய்யா, மாநிலக் குழு உறுப்பினர் எஸ். செல்லவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ராஜன் கிஷ்சி சாகர் தொடங்கி வைத்து பேசினார். ஏஐடியுசி தமிழ்நாடு பொதுச் செயலர் ம.இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) பொதுச் செயலர் சாமி. நடராஜன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் அ. பாஸ்கர், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தென்னக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வேலை அறிக்கையைத் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொதுச் செயலர் பி.எஸ். மாசிலாமணி முன் வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன், நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க. மாரிமுத்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ. பழனிசாமி, கே. உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர்கள் முத்து. உத்திராபதி (தெற்கு), மு.அ. பாரதி (வடக்கு), தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன், செயலர் சோ.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.
Next Story

