நெற்பயிரை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்த பயறு வகை பயிர்களை வரப்பில் பயிரிட ஆலோசனை

X
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில், பூலாங்கொல்லை கிராமத்தில், நெல் வயல் சூழல் ஆய்வு குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பயிற்சியில் பூச்சிகளை அறிவோம், பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்தி நஞ்சில்லாத உணவினை உற்பத்தி செய்திடுவோம் என்ற நோக்குடன் வேளாண்மை உதவி இயக்குநா்(பொ) ஜி.சாந்தி பயிற்சியை துவங்கி வைத்து பேசுகையில், அரசு திட்டப்பணிகள் குறித்தும், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வேளாண்மை பொருட்கள் குறித்தும், நெற்பயிரில் தொடா்ந்து பின்பற்ற வேண்டிய தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலா் புனிதா பேசுகையில், "நெற்பயிரை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த வரப்பு பயிராக பயறு வகைகளை சாகுபடி செய்யலாம். ரசாயன பூச்சின்கொல்லிகள், உரங்கள் பயன்பாடு குறைப்பதன் மூலம் மண் வளம் காக்கலாம்" என்றார். மேலும், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் பயன்பாடு, நெற்பயிரில் சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணி அட்டை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள், நன்மை, தீமை செய்யும் பூச்சிகளை இனம் கண்டறிதல் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் நிவாசன் செய்திருந்தார்.
Next Story

