அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் தேக்கம்
நாகை மாவட்டத்தில், இந்தாண்டு 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில், விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொண்டு நிறைவுறும் நிலையில் உள்ளது. இந்நிலையில், அறுவடை மூலம் கிடைத்த நெல் மூட்டைகளை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். எந்தாண்டும் இல்லாமல் இந்த ஆண்டு ஒரு போகமாக, சம்பா சாகுபடி செய்யப்பட்ட காரணத்தால், ஒரு வாரத்திற்கும் மேலாக, விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குடோனுக்கு அனுப்பி வைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில், 100- க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், தலா 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் தேக்கமடைந்து இருப்பதாகவும், அதனை உடனடியாக குடோன்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, மடப்புரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலெட்சுமி ரமேஷ் கூறியதாவது விவசாயிகள் மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து அதனை பெரும் சிரமத்திற்கும் மத்தியில் அறுவடை செய்துள்ளனர். இந்நிலையில் அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் ஒரு வாரத்திற்கு மேலாக விற்பனை செய்ய முடியாமல், கொள்முதல் நிலைய வளாகத்திலேயே காத்திருக்கின்றனர். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும், நாளொன்றுக்கு 800 முதல் ஆயிரம் நெல் மூட்டைகள் வரை நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில், ஒரு லாரி மூலம் மட்டுமே 500 முட்டைகள் குடோனுக்கு அனுப்பி வைக்கப்படுவதால், மீதமுள்ள நெல் முட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேக்கமடைகிறது. அதுமட்டுமின்றி, நெல் மூட்டைகளை லாரியிலிருந்து இறக்கி குடோன்களுக்கு எடுத்துச் செல்லும் சுமை தூக்கும் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், கொள்முதல் நிலையங்களில் உள்ள பணியாளர்களே குடோனுக்கு நெல் மூட்டைகளை இறக்க செல்வதாகவும், இதனால் விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் கொள்முதல் செய்வதில் சிக்கல் இருக்கிறது. ஆகவே, சுமை தூக்கும் பணியாளர்களை கூடுதலாக நியமித்து, நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும், இரண்டு லாரிகள் வீதம் தேக்கமடையாமல் நெல் மூட்டைகளை குடோனுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஆயிரம் மூட்டைக்கு அதிகமாக கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து உடனுக்குடன் குடோனுக்கு அனுப்பி வைத்தால் மட்டுமே, விவசாயிகள் பாதிப்பிலிருந்து மீள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story




