ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சி செய்த இளைஞர் - சிசிடிவி காட்சியால் போலீசில் சிக்கிய இளைஞரை கைது செய்து நரிக்குடி போலீசார் விசாரணை

X
நரிக்குடி பேருந்து நிலையம் அருகே தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சி செய்த இளைஞர் - சிசிடிவி காட்சியால் போலீசில் சிக்கிய இளைஞரை கைது செய்து நரிக்குடி போலீசார் விசாரணை விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பேருந்து நிலையம் அருகே இராமேஸ்வரம் சாலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியா ஒன் என்கிற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உரிமம் பெற்று நடத்தி வருகிறார். மேலும் கமிஷன் அடிப்படையில் அருப்புக்கோட்டை, நரிக்குடி, பந்தல்குடி, ம.ரெட்டியாபட்டி, க.விலக்கு, கோவிலாங்குளம், முக்குளம் மற்றும் பரளச்சி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 11 ஏடிஎம் மையங்களையும் சரவணனே உரிமம் பெற்று நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த நிலையில் கடந்த பிப்.13 ஆம் தேதி மதியம் நரிக்குடி இந்தியா ஒன் ஏடிஎம் மெஷினில் சரவணன் பணம் நிரப்பி விட்டு சென்ற நிலையில் மறுநாளான பிப்.14 ஆம் தேதி மாலை நரிக்குடி இந்தியா ஒன் ஏடிஎம் மையத்தில் மீண்டும் பணம் நிரப்புவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு ஏடிஎம் மெஷினின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதியானது மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு சரவணன் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து பதறிப்போன சரவணன் உடனடியாக ஏடிஎம் மெஷினை திறந்து ஆய்வு செய்த போது பணம் அனைத்தும் பத்திரமாக இருப்பதை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டார். இருப்பினும் இந்த ஏடிஎம் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து சரவணன் நரிக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து நரிக்குடி சரக இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு உத்தரவின் பேரில் நரிக்குடி சார்பு ஆய்வாளர் முகைதீன் அப்துல் காதர் தலைமையிலான நரிக்குடி போலீசார் சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஏடிஎம் மையத்திற்கு நேரில் சென்று அங்கு உடைக்கப்பட்டு சிதறி கிடந்த ஏடிஎம் மெஷினின் உதிரி பாகங்களை ஆய்வுகள் செய்தும், ஏடிஎம் மையத்தின் சிசிடிவி கேமரா மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சில சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நரிக்குடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வுகள் செய்த போது பிப்.13 ஆம் தேதி இரவில் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது காட்சியாக பதிவாகி இருந்துள்ளது. இந்த நிலையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தலைமறைவான மர்ம நபரை சில நாட்களாக நரிக்குடி போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நரிக்குடி ஏடிஎம்கொள்ளை முயற்சி நடந்தது தொடர்பாக அங்கு பதிவாகிய வீடியோ காட்சிகளை வைத்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள பிச்சப்பிள்ளையேந்தல் பகுதியை சேர்ந்த சாமியப்பன் (23) என்பதும் அந்த இளைஞர்தான் ஏடிஎம் மையத்தில் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டடும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சாமியப்பனை கைது செய்த நரிக்குடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜற்படுத்திய நிலையில் சிறையில் அடைத்தனர்.
Next Story

