நகராட்சி குடிநீர் குழாய் உதிரி பாகங்களை திருடிய இளைஞர் கைது

ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் குழாய் உதிரி பாகங்களை திருடி இளைஞர் கைது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில்  மத்திய அரசின் அம்ரூத் குடிநீர்  திட்டத்தில், ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்புகளுக்காக  குழாய் பைப்புகள் பொருத்தப்பட்டு அதனுடன் பயன்படுத்தப்படும் தண்ணீரை அளவிடும் வகையில் பித்தளை வால்வுகள் பொருந்திய மீட்டர் கருவிகள் இணைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில்   கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில்  குறிப்பிட்ட பித்தளை வால்வுகள் உள்ள குடிநீர் குழாய் உதிரி பாகங்கள் மட்டும் திருடப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து பள்ளிபாளையம்  நகராட்சி ஆணையாளர் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் குடிநீர் குழாய் உதிரி பாகங்களை திருடி செல்லும் நபர் குறித்த ஆதாரங்களோடு பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.. இதன் அடிப்படையில் பள்ளிபாளையம் காவல் நிலைய எஸ்.ஐ.க்கள்  பிரபாகரன், செந்தில்வேல் பெருமாள் , மலர்விழி உள்ளிட்ட போலீசார் கண்டிப்புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது அவர் ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த நவீன் ராஜ் என்பதும் , இரண்டு மாதங்களுக்கு மேலாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகராட்சி குடிநீர் குழாய் பித்தளை வால்வுகள் பொருந்திய உதிரி பாகங்களை திருடிச் சென்று  அதில் உள்ள பித்தளை வால்வுகளை மட்டும் எடுத்துக் கொண்டு,கிலோ கணக்கில் பழைய இரும்பு கடையில் விற்று வந்தது தெரிய வந்தது  .  இதனையடுத்து பள்ளிபாளையம் போலீசார் அவரிடமிருந்து நகராட்சி குடிநீர் குழாய் உதிரி பாகங்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து  குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்...
Next Story