குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம் போராடி மீட்பு

X
காஞ்சிபுரம், அசோக் நகர் பகுதியில் உள்ள காமராஜர் தெருவில், அழகுராஜ் மற்றும் கீர்த்தனா தம்பதிக்கு, ஒன்றரை வயதில் தர்ஷினி என்ற மகள் உள்ளார். நேற்று காலை சமையல் பாத்திரங்களை வைத்துக்கொண்டு தர்ஷினி விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, குழந்தையின் தலையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரம் மாட்டிக் கொண்டது. இதனால், மூச்சுவிட சிரமப்பட்டு அழுதபடி குழந்தை இருந்துள்ளது. உடனே பெற்றோர், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர்.அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் திபாகர் மற்றும் செவிலியர், ஊழியர்கள், குழந்தையின் தலையில் மாட்டியிருந்த பாத்திரத்தை அரை மணி நேரம் போராடி, கத்தரிக்கோல் வைத்து துண்டித்து எடுத்தனர். பாத்திரத்தை அகற்றிய பின், குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த சம்பவத்தால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே, குழந்தை தலையில் இருந்து பாத்திரத்தை அகற்றி மீட்ட மருத்துவ குழுவை உயரதிகாரிகள் பாராட்டினர்.
Next Story

