சேலத்தில் பணம் இரட்டிப்பு தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி

X
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், சேலம் சுவர்ணபுரி அய்யர் தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து ‘ரீ கிரியேட் பியூச்சர் இந்தியா’ என்ற பெயரில் தனியார் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் படித்த, படிக்காத ஆண், பெண்கள், இல்லத்தரசிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு தருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பகுதி நேரம், முழுநேரம் வேலை செய்தால் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பு நிறுவனம் சார்பில் துண்டு பிரசுரம் அச்சடித்து பொதுமக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது. இதனை அறிந்த சேலம் பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் அந்த நிறுவனத்திற்கு படையெடுக்க ஆரம்பித்தனர். அப்போது, நிறுவனத்தில் சேருவதற்கு ஒரு நபருக்கு ரூ.3,500 செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் நபருக்கு பெரிய சில்வர் பாத்திரமும், வாரம் ரூ.650 வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் அந்த தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட மாதத்தில் பணம் இரட்டிப்பு தருவதாகவும் கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம்பிய 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதுவரை பல கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அந்த நிறுவனத்தை ராஜேஷ் காலி செய்துவிட்டு செல்வதாக தகவல் பரவியது. இதனால் அந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் நேற்று மாலை அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் மற்றும் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மாநகர போலீஸ் துணை கமிஷனர் கீதா, உதவி கமிஷனர்கள் ரமலி ராமலட்சுமி, பரவாசுதேவன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் நிறுவனத்திற்குள் சென்று பொதுமக்களிடம் பணம் வசூலித்துவிட்டு ஏன் திடீரென காலி செய்வதற்கு என்ன காரணம்? என்றும், பணம் இரட்டிப்பு மோசடி நடந்துள்ளதா? என்பது தொடர்பாகவும் அங்கிருந்த நிறுவனத்தின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த மோசடி தொடர்பாக நிறுவன உரிமையாளர் ராஜேஷ் என்பவரை போலீசார் பள்ளப்பட்டி போலீஸ் நிலைத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

