சேலத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

X
சேலம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊர்க்காவல் படையில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் முக்கிய கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்கும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதுதவிர, போலீசாருடன் இணைந்து ரோந்து பணியிலும் ஈடுபடுகிறார்கள். இதனிடையே, மாவட்ட ஊர்க்காவல் படையில் புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது, சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் 26 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்கள் தேர்வு குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், 114 ஆண்கள், 6 பெண்கள் கலந்து கொண்டனர். ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் தனசேகரன், துணை கமாண்டர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் ஆட்கள் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு உயரம், எடை, மார்பளவு என உடல் தகுதியும், அவர்களது கல்வித்தகுதி அடிப்படையிலும் தேர்வுகள் நடந்தது. மேலும், மாவட்ட ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்படும் ஆட்கள் தேர்வு பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் நேரில் பார்வையிட்டார்.
Next Story

