முந்திரி ஆலையை மூடி முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

முந்திரி ஆலையை மூடி முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் திருவட்டாறு  பகுதியில் முந்திரி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை கேரளாவை சேர்ந்த அசோக் குமார் என்பவர் நடத்தி வருகிறார். இதில் 130 க்கு மேற்பட்ட பெண்கள் சுமார் 25 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள்.      இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும்,  ஒரு மாதமாக முந்திரி ஆலை மூடி வைத்திருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 3 லாரிகளில் முந்திரி ஆலையில் உள்ள பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக வந்தனர். இந்த தகவல் தொழிலாளர்களுக்கு தெரிய வந்தவுடன் அங்கு குவிந்தனர்.        அதற்குள்  இரண்டு லாரி பொருட்களை ஏற்றி வெளியில் சென்று விட்டன. ஒரு லாரி பொருட்களை ஏற்றி செல்வதற்குள் தொழிலாளர்கள் சிறை பிடித்து  முந்திரி ஆலையை  முற்றுகையிட்டனர்.  தொழிற்சாலை உரிமையாளர் அசோக்குமார் இங்கு வந்து தரவேண்டிய சம்பளம் மற்றும் சேமிப்பு நிதி போன்றவை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.      தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் ஜெபசிங்குமார், வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர். இதை அறிந்து திருவட்டாறு போலீசார், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொழிற்சாலை உரிமையாளர் வந்ததும் அவரிடம் பேசி தங்களுக்கு தரவேண்டிய பண பலன்கள் சம்பந்தமாக பேசி முடிவு எடுக்கலாம் என்று முடிவு எடுத்தனர். அதன்படி முந்திரி ஆலை பூட்டிவிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story