நகராட்சி குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகளிடையே வாக்குவாதம்

நகராட்சி குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகளிடையே வாக்குவாதம்
X
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நகராட்சி குடிநீர்த் தொட்டி கட்டுவது தொடர் பான பிரச்சினையில் ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் இரு தரப்பாக பிரிந்து வாக்குவாதம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் வைகை குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக நகரில் 5 இடங்களில் தலா 10லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட உள்ளன. இதில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதி கேட்டது. ஆனால், இதற்கு ஒன்றிய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். குடிநீர்த் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஆட்சியர் ஆஷா அஜித் அனுமதி கொடுத்துள்ளதாகக் கூறி, நகராட்சித் தலைவர் (திமுக) மாரியப்பன் கென்னடி. ஆணையர் ஆறுமுகம் உள்ளிட்டோர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடிநீர்த் தொட்டி கட்டும் பணியை தொடங்க முயன்றனர். இதற்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் திமுக ஒன்றியச் செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான அண்ணாத்துரை ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஒன்றிய, நகர திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் சூழல் ஏற்பட்டதையடுத்து, அங்கு வந்த போலீசார் அவர்களை சமரசப்படுத்தினர். தொடர்ந்து மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மாலையில் ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் நகராட்சி அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கிளைச் செயலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஒன்றிய அலுவலக இடத்தை மற்றொரு துறைக்கு கொடுக்க ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை. ஊரக வளர்ச்சித் துறை செயலர், இயக்குநருக்கு தான் அதிகாரம் உள்ளது. அவர்களிடம் அனுமதி பெறாமல் அத்துமீறி நுழைந்து பணியை தொடங்க முயற்சித்துள்ளனர். இதைக் கண்டிக்கிறோம். மீண்டும் பணியைத் தொடங்கினால் தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.
Next Story