கட்டுநர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தம்

X
ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அகில இந்திய கட்டுநர் சங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் சங்கத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி முன்னாள் மாநிலத் தலைவர் எம். அய்யப்பன் திங்கள்கிழமை மாலை தெரிவித்தது: ஜல்லி உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு நடைக்கும் கடவுச்சீட்டு (டிரான்ஸ் சீட்) அனுமதி கொடுப்பதில்லை. ஒரு முறை கொடுத்து விட்டு 5 நாட்களுக்கு லாரியை ஓட்ட சொல்கின்றனர். கடவுச்சீட்டு இல்லாவிட்டால் லாரியை பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல், ஓட்டுநர்களைக் கைது செய்கின்றனர். மேலும், கடவுச்சீட்டு அனுமதியை ரூ.2 ஆயிரத்துக்கு விற்கின்றனர். இதனால் ஜல்லி ஏற்றி வருவதை நிறுத்தி விட்டதால், டெல்டா மாவட்டங்களில் கட்டுமானங்கள் நின்று விட்டன. ஆண்டு இறுதியான மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டிய அனைத்து பணிகளும் முடங்கிவிட்டன. கட்டுமானத் தொழிலாளர்களும் வேலையின்றி தவிக்கின்றனர். ஜல்லி உற்பத்தியாளர்கள் யூனிட்டுக்கு ரூ. 1,500 விலையை உயர்த்தியதால் எங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை அரசு கவனத்துக்குக் கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார் அய்யப்பன். அப்போது, சங்கத்தின் தஞ்சாவூர் மையத் தலைவர் கே.செல்வகுமார், செயலர் சி.மாரிமுத்து, பொருளாளர் ஏ.அன்புராஜா, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story

