இரத்தச்சோகை ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் இரும்புக் கண்மணிகள் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

X
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஜி.எஸ்.டி.மஹாலில் இன்று(25.02.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் - காவேரி படுகை (ONGC) இணைந்து இரத்த சோகையற்ற விருதுநகரை உருவாக்குவோம் என்ற முன்னெடுப்பில், வளரிளம் பெண்களுக்கான இரத்தச்சோகை ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் இரும்புக் கண்மணிகள் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து தொகுப்புகளை மாணவிகளுக்கு வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் வளரிளம் பெண்கள் இரத்தசோகையற்ற, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: நமது மாவட்டத்தில் பெண் குழந்தைகளிடத்தில் இருக்கக்கூடிய இரத்த சோகை குறைபாடு தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் இரத்தசோகை பாதிப்புடன் இருக்கிறார்கள் என தெரியவருகிறது. இதில் மூன்று சதவீதமான பெண் குழந்தைகள் ஒரு தீவிரமான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதாவது அவர்களுக்கு இரத்த சோகை என்று சொல்லக்கூடிய இரத்தத்தின் உடைய இரும்புச்சத்தின் அளவு குறைந்து உடனடியாக இரத்தம் ஏற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். மிதமான இரத்தசோகை பாதிப்புக்குண்டான குழந்தைகள் ஏறத்தாழ 20 சதவிகிதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு மருந்து, மாத்திரை, ஊட்டச்சத்துக்கள் மூலமாக சரி செய்ய வேண்டும். மீதமுள்ள 20 சதவிகித குழந்தைகள் உணவு பழக்க வழக்கங்களின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதிகமாக வலுவை தாங்கக்கூடிய அளவிற்கு கட்டிடத்தை கட்டி எழுப்புவதற்கு போதுமான அளவு அடித்தளம் எப்படி முக்கியமோ, அதுபோல ஒரு மனிதன் 75 ஆண்டு காலம் சராசரியாக வாழ்கிறார்கள் என்றால், இதில் மிக முக்கியமான நாட்கள் என்பது குழந்தைகளுடைய முதல் ஆயிரம் நாட்கள் ஆகும். அதாவது ஒரு தாயினுடைய வயிற்றில் அது கருவாக உருவானதிலிருந்து குழந்தையின் உடைய 1000 நாட்கள் என்பது ஏறத்தாழ இரண்டரை வயது வரைக்கும் அவர்களுக்கு முழுமையான உடல் வளர்ச்சி ஏற்படுவதை உறுதி செய்கிறது. அப்பொழுதுதான் அடிப்படையான மூளை வளர்ச்சி, மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி எல்லாம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு ஊட்டச்சத்து எவ்வளவு அவசியமோ, அது போல் எதிர்கால வாழ்க்கைக்கு மனிதன் வாழக்கூடிய நாட்களில் மிக முக்கியமான உடல் வழு ஏற்படக்கூடிய அந்த பதின்ம பருவ வயதுகளில், அவர்களுக்கான புரதச்சத்தின் மூலமாக ஏற்படக்கூடிய உடல் கட்டுமானம், கால்சியம் சத்தின் மூலமாக ஏற்படக்கூடிய எலும்பு வலுப்பெறுதல் இவற்றையெல்லாம் சரிவிகித உணவு என்கிறோம். அதாவது எல்லா சத்துக்கள் இருக்கக்கூடிய அளவிற்கு உணவை இருக்க வேண்டும். உணவு என்பது நம்முடைய பசியை மட்டும் போக்குவதற்கானது அல்ல. இந்த உடலுக்கு நிறைய சத்துக்கள் தேவைப்படுகிறது. கார்போஹைட்ரேட், புரத சத்து, கொழுப்பு சத்து போன்ற பெரிய அளவிலான சத்துக்கள் தேவைப்படுகிறது. அதே போல் பொட்டாசியம் போன்ற சிறிய அளவிலான சத்துக்களும் நமக்கு தேவைப்படுகிறது. நுண் ஊட்டச்சத்துகளும், பெரிய ஊட்டச்சத்துகளும் ஒரு மனிதனுடைய உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. அவை பெரும்பாலும் நமக்கு உணவுப் பொருட்களில் இருந்தே கிடைக்கிறது. ஆனால் எந்த உணவில் எந்த சத்துக்கள் இருக்கின்றன என்பதை புரிந்துகொண்டு நாம் எல்லா சத்துக்களும் கிடைக்கக்கூடிய அளவிற்கு நம்முடைய உணவை வைத்துக்கொள்வதுதான் சரிவிகித உணவு. பசியை மட்டும் போக்குவது சரியான உணவு முறை அல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவரும் கூறுகிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் ரத்தத்தில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து அளவை சரியாக கவனிக்கவில்லை என்றால் பின்னால் ஒரு பெரிய பாதிப்புக்குள்ளாகி ஒரு பெரிய அளவிலான மருத்துவ உதவியை நாட வேண்டி இருக்கும். நாம் சாப்பிட வேண்டிய உணவுதான் நமக்கு மருந்து. அதை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தசோகையை தவிர்ப்பதில் மிக முக்கியமானது இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்கள் அதிகமாக உட்கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகி இரத்த சோகையை சரிசெய்ய இயலும். ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த உணவு குறித்த புரிதல் மிக அவசியம். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலமாக, நமது பகுதிகளில் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு இரத்தசோகை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து பெட்டகம் என்பது உணவு பொருட்களாகும். சரிவிகித உணவு நன்றாக சாப்பிட்டு வந்தால் அது தான் மருந்து. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று அடிக்கடி வந்து ஹீமோகுளோபின் அளவு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான சமூகத்தின் எதிர்காலம் என்பது உடல் நலன் தான். இதனை பற்றி நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் உங்களுடைய நண்பர்களுக்கும் எடுத்து கூற வேண்டும். நீங்கள் அனைவரும் மிகச்சிறந்த முன்னேற்றத்தை பெற்றிருக்கக்கூடிய மாணவிகளாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஹீமோகுளோபின் அளவு 10.9 க்குக் கீழ் உள்ள 2,936 வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வளரிளம் பெண்களுக்கான இரத்தசோகை ஊட்டச்சத்து தொகுப்பில் ஆஸ்கார்பிக் ஆசிட் (விட்டமின்- சி) மாத்திரை, இரும்பு சத்து சிரப், பேரிச்சம்பழம், நாட்டு சர்க்கரை தூள், முருங்கை இலைப் பொடி, உலர் பழங்கள் மற்றும் காய்கறி விதைகள் உள்ளிட்ட முக்கியமான உணவுப் பொருட்கள் அடங்குகின்றன. இந்த ஊட்டச்சத்து தொகுப்பு பெண்களின் இரத்தச் சோகை குறைபாட்டை தடுக்கும் நோக்கத்துடன் வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து தொகுப்பு வட்டார வாரியாக திருச்சுழியில் 996, நரிக்குடியில் 130, காரியாபட்டியில் 845 மற்றும் அருப்புக்கோட்டையில் 965 ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வில் முதல் கட்டமாக 245 மாணவிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
Next Story

