விற்பனை ஜோர்

X
ஈரோடு ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றதாகும். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் துணிகளை ஒட்டுமொத்தமாக வாங்கி செல்வார்கள். சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஜவுளி வார சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டது. சில்லறை விற்பனை பெயர் அளவில் மட்டும் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஜவுளி வார சந்தை கூடியது. பல்வேறு இடங்களில் இருந்து வந்த சிறு வியாபாரிகள் ஜவுளிக்கடைகளை அமைத்திருந்தனர். இந்த முறை வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. இதைப்போல் சில்லறை விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும்போது,கடந்த ஒரு மாதமாக ஜவுளி வார சந்தையில் பல்வேறு காரணங்களால் வியாபாரம் மந்த நிலையில் நடந்து வந்தது. ஆனால் இன்று கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். இன்று மட்டும் மொத்த விற்பனை 25 சதவீதம் நடைபெற்றது. சில்லரை விற்பனை 30 சதவீதம் நடைபெற்றது. தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் காட்டன் சம்பந்தமான துணிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி வரக்கூடிய நாட்களில் ஜவுளி சந்தை வியாபாரம் மேலும் சூடு பிடிக்கும் என்றனர்.
Next Story

