மயான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி காங்கேயம் வட்டாட்சியரிடம் மனு

X
காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் இது குறித்து ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில், பழையகோட்டை ஊராட்சி பகுதி மக்கள் இன்று காங்கயம் வட்டாட்சியர் ஆர்.மோகனனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியம், பழைய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு சேமலை வலசு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த கிராமத்தின் அருகே தெற்கு சேமலை வலசு பகுதியில் தமிழக அரசுக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலத்தை மயான நிலமாகப் பயன்படுத்தி, சுமார் 10 தலைமுறைகளாக மேற்கண்ட இடத்தில் தான் இறந்தவர்களை நல்லடக்கம் செய்து வருகிறோம். மேலும் இப்பகுதியில் வசித்து வரும் அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து, சமத்துவ சுடுகாடாக மேற்கண்ட நிலத்தை பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில், மேற்கண்ட இடத்தை இப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து, சமத்துவ மயானமாக பயன்படுத்தி வரும் நிலத்தை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே, மேற்கண்ட இடத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்வதை நிறுத்த வேண்டும். மேலும் மேற்கண்ட நிலத்தில் மயான அடிப்படைக் கட்டமைப்பான சுற்றுச் சுவர், மின் விளக்கு, சிமெண்ட் சாலை மற்றும் தண்ணீர் வசதி அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கிழக்கு சேமலை வலசு பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நடவடிக்கை எடுக்காத போது பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்கள்.
Next Story

