பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பல்வேறு துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பல்வேறு துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பல்வேறு துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், இன்று (26.02.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், பேறுகால இறப்புக்கான காரணங்கள், அவற்றை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், எடை குறைந்த குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்விரிவாக ஆய்வு செய்தார். தொடர்ந்து, சுகாதாரத் துறையில் செயல்படுத்தப்படும் கண்ணொளிக் காப்போம் திட்டம், பள்ளி சிறார் நலவாழ்வுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான நலத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலரிடமும் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை பள்ளி கல்லூரி மற்றும் காவல்துறையிடன் இணைந்து புகையிலையின் பாதிப்பு பற்றி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் போதைப் பொருட்கள் பயன்பாட்டினை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அயோடின் கலந்த உப்பு உட்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் தாய் மற்றும் சேய் மரணத்தினை முற்றிலும் தடுத்திடும் பொருட்டு, அனைத்து கர்ப்பிணிகளையும் கிராம சுகாதார செவிலியர் தொடர் கண்காணிப்பு செய்து, அபாய அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி தொடர் சிகிச்சை மேற்கொள்ள இணை இயக்குநர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனைகள், பிரசவங்களை சிறப்பு கவனம் எடுத்து மேற்கொள்வதை அவ்வாட்டாரத்திற்குட்பட்ட வட்டார மருத்துவ அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். காசநோய் கண்டறிதல் திட்டத்தின் கீழ் சளி பரிசோதனையை அதிகமாக செய்து, காசநோய் கண்டறிதலை அதிகப்படுத்தி காச நோயினை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டாக்டர்.முத்துலட்சுமி நிதியுதவி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியினை தகுதி வாய்ந்த கர்ப்பிணிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழுநோய் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உரிய நேரத்தில் கிடைக்க பெறுவதை சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.கே.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, குடும்ப நல துணை இயக்குநர், காசநோய் ஒழிப்பு துணை இயக்குநர் அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், மற்றும் இதர சுகாதார துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story




