சிப்காட் தொழில் பூங்காவிற்கு நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு விவசாயிகள் கடும் கண்டனம் - வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோரிக்கை மனு

X
திருச்சுழி அருகே சிப்காட் தொழில் பூங்காவிற்கு நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு விவசாயிகள் கடும் கண்டனம் - வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோரிக்கை மனு அளித்த விவசாயிகள் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் அகத்தாகுளம் ஊராட்சியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி விவசாயிகள் துணை வட்டாட்சியர் சரவணக்குமாரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். திருச்சுழி அருகே அகத்தாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட அகத்தாகுளம், முத்தனேரி, நல்லதரை, நத்தகுளம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்திட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் அகத்தாகுளம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் விவசாயமே இவர்களுக்கு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சிப்காட் தொழில் பூங்கா தங்கள் பகுதியில் அமைவதற்கு இந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது அகத்தாகுளம் வருவாய் கிராமப் பகுதிகளில் சுமார் 90 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த அரசு புறம்போக்கு நிலங்களில் தான் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நியாய விலைக் கடை மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்றவை அமைந்துள்ளன. மேலும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களாகவும், நீர் பிடிப்புப் பகுதிகளாகவும் இந்த நிலங்கள் பயன்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த நிலங்களை கையகப்படுத்திட மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு மற்றும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் தங்கள் பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்றும், இல்லையெனில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story

