கூலி உயர்வு தொடர்பான மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உரிமையாளர் சங்கம் முன்பாக தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

X
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் ஒப்பந்தப்படி மூன்றாவது ஆண்டு ஊதிய உயர்வு கோரி பருத்தி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் ஆறாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூலி உயர்வு தொடர்பான மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உரிமையாளர் சங்கம் முன்பாக தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் சுமார் 600 விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடப்படும். கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் காலாவதியாகி விட்ட நிலையில், இந்த ஆண்டு 5 சதவிகித கூலி உயர்வு வழங்க வேண்டும். இந்த ஆண்டுக்கான கூலி உயர்வு கோரியும், கூலி உயர்வு வழங்காத விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் நடவடிக்கை எடுக்காத தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்தும், ஏஐடியுசி மற்றும் சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் இன்று ஆறாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கூலி உயர்வு தொடர்பாக ஶ்ரீ பத்திரகாளியம்மன் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட மூன்று கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் இன்று விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தளவாய்புரம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிகாரிகள் வலியுறுத்தியும் கூலி உயர்வு வழங்காத உரிமையாளர்களை கண்டித்தும் ஒப்பந்தப் படி கூலி உயர்வு வழங்கவும் அரசு தலையிட்டு சுமூகமான முடிவு எடுக்கவும் கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விசைத்தறி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தால் அப் பகுதியில் வசிக்கும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் தங்களின் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Next Story

