மும்மொழி கல்வி கொள்கையை கைவிடாவிட்டால் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துக்கள் அழிக்கும் போராட்டம்

X
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியாவில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா? அல்லது மன்னர் ஆட்சியா? என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய கல்வி நிதி, பேரிடர் நிதி உள்ளிட்ட எந்த ஒரு நிதியும் வழங்காமல் ஒருதலைபட்சமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. புதிய கல்வி கொள்கை தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், அரசு பள்ளி மாணவர்கள் கல்வியை பாதியில் நிறுத்தும் நிலையை உருவாக்கும் என்பதாலும் அதனை எதிர்க்கிறோம். மத்திய அரசால் செயல்படும் நவோதயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர்கள் கூட இல்லை. இந்த கல்வி கொள்கையானது ஆர்.எஸ்.எஸ்.சின் ஒரே நாடு, ஒரே மொழி என்ற நிலையை அமல்படுத்தும் முயற்சியாகும். மும்மொழி கல்வி கொள்கையை கைவிடாவிட்டால் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் விரைவில் நடத்தப்படும். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்-அமைச்சர் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சினை என்பதால் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பற்கேற்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 4 நாட்கள் சேலத்தில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story

