விவசாயிகள் கவலை

விவசாயிகள் கவலை
X
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் நாய்கள் கடித்து 531 கால்நடைகள் பலி விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கவலை
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, பெருந்துறை, காஞ்சிகோவில், நசியனூர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். இவை வெறி நாய்களாக மாறி ஆடு, மாடு கோழிகளை கடித்துக் கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வாழ்வாதாரத்துக்காக ஆடு, மாடு, கோழிகளை ஏழை விவசாயிகள் வளர்க்கின்றனர். சில நேரங்களில் நோய் தாக்குதலால் இவை இறக்கும். அப்போது அரசு சார்பில் சொற்பத்தொகை இழப்பீடாக கிடைத்தாலும் அவர்கள் மீண்டு வருவது பெரும் சிரமம். இதற்கெல்லாம் மேலாக தற்போது ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளை நாய்கள் கடித்து குதறுவதும் அரசு சார்பில் இழப்பீடு கிடைக்காததும் துயரமாக உள்ளது. இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:-கிராமங்களிலும், நகரங்களிலும், வீட்டு நாய்கள், தெரு நாய்களுக்கும் உணவு கிடைப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. கட்டுப்பாடு இன்றி தொடர்ந்து இனப்பெருக்கம் செய்வதால் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நாய்களுக்கு பிடித்த உணவு பற்றாக்குறை, எண்ணிக்கை அதிகரிப்பு, கூட்டமாக சேரும்போது வேட்டையாடும் குணம் ஏற்படுகிறது. ஆடு,மாடு , கோழி சில நேரங்களில் மனிதர்களையும் கூட துரத்தியும் கடித்தும் விளையாடியும் தன் வேகம் அல்லது வெறியை குறைக்கும்.அதுபோல ஆடு, மாடு, கோழிகளை கடித்து தின்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மட்டுமே வழி. ஆனால் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வது இனப்பெருக்கத்தை சீராக்கும் அமைப்புகள் தமிழகத்தில் மிக குறைவாகவே உள்ளன. கடந்த இரு மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 298 செம்மறி ஆடுகள், 221 வெள்ளாடுகள், 12 மாடுகள் என 531 கால்நடைகள் பலியானதை உறுதி செய்துள்ளோம். அரசிடம் இழப்பீடு கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இது பற்றி கால்நடை வளர்ப்போர் கூறும்போது, நகரம், கிராமம் என்று இல்லாமல், நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்த அரசு சட்ட திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். கள்ள சாராய இறப்புகளுக்கு கூட ஓரிரு நாட்களில் இழப்பீடு வழங்குகின்றனர். நாய்கள் கடித்து கால்நடை இறந்து, இரண்டு மாதங்கள் ஆகும் நிலையிலும் ஆரம்ப கட்ட பணிகள் கூட நடக்கவில்லை. இதற்காக தனிக்குழு அமைத்து, நாய் கடித்து கால்நடை , மனிதர்கள் இறந்தார்கள் என உறுதியானால் அடுத்தடுத்த நாட்களில் இழப்பீடு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்றனர்.
Next Story