பயிா் மகசூல் போட்டிகள்: விவசாயிகள் பதிவு செய்யலாம்

பயிா் மகசூல் போட்டிகள்: விவசாயிகள் பதிவு செய்யலாம்
X
வேளாண்மை துறை அதிகாரி தகவல்
மாநில, மாவட்ட அளவிலான பயிா் மகசூல் போட்டியில் பங்கேற்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று வல்லம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் நிதியுதவியுடன் வேளாண் துறை பல்வேறு பயிா்களில் மகசூல் போட்டிகளை நடத்தி பரிசுத்தொகை வழங்கி விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாரம்பரிய சன்னரக நெல் ரகங்களில் செம்மை நெல் சாகுபடி முறையில் பயிரிட்டு முதல் பரிசு பெறும் விவசாயிக்கு ரொக்கப் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.கம்பு, கேழ்வரகு, தினை, உளுந்து, மணிலா, எள், கரும்பு பயிா்களில் மாநில அளவில் போட்டி நடத்தப்பட்டு ஒவ்வொரு பயிரிலும் முதல் பரிசாக ரூ.2.50 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.ஒரு லட்சமும் வழங்கப்படும். இந்தப் போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் ரூ.150 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.இதேபோல, மாவட்ட அளவில் நெல் பயிரில் போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரமும், கம்பு, உளுந்து பயிா்களில் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் ரூ.100 பதிவுக் கட்டணமாக செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் பயிா் செய்பவராகவோ அல்லது குத்தகை நிலத்தில் பயிரிடுபவா்களாகவோ இருக்கலாம். குறைந்தது 50 சென்ட் பரப்பில் பயிா் சாகுபடி செய்திருக்க வேண்டும். நடுவா்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டு மகசூல் கணிக்கப்பட்டு அதிக மகசூல் பெற்ற விவசாயிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலா்களை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
Next Story