குமரி கலெக்டர் அலுவலகம் அருகே கழிவுநீர் ஓடையில் சிக்கிய லாரி

X
நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. மாநகரப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலையோரம் அமைந்துள்ளதால் அங்கு வரும் வாடிக்கையாளர் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் வாணிக நிறுவனங்கள் தங்களது பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோல் அனைத்து சாலைகளையும் விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் சாலையோரம் அமைந்துள்ள கழிவுநீர் ஓடையின் மேல் பகுதியில் காங்கிரீட் ஸ்லாப்புகள் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அரிசி மூடைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. கலெக்டர் அலுவலக பகுதியில் செல்லும்போது சாலையோரம் உள்ள கான்கிரீட் சிலாப் மீது அந்த லாரி ஏறியது. இதில் எடை தாங்காமல் கான்கிரீட் சிலாப் உடைந்தது. இதனால் லாரி கழிவு ஓடையில் மாட்டியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கழிவுநீர் ஓடையில் மாட்டிய லாரியை அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
Next Story

