ராமநாதபுரம் மீனவர்கள் உண்ணாவிர போராட்டத்தை தொடங்கினர்
ராமநாதபுரம்எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள், நாட்டுப் படகு மீனவர்கள் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு படகு அரசுடைமையாக்கப்பட்டு வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 23ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஐந்து விசைப்படகையும் அதிலிருந்த 32 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு வெளிக்கடை சிறையில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிறை கைதிகளாகவும், 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர். மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இலங்கை வசம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர் பேச்சு வார்த்தையை துரிதப்படுத்தி உடனடியாக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம்வலசை தெருவில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கட்சி தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உண்ணாவிரத போராட்டம் இரவு பகலாக நடைபெறும் எனவும் மத்திய அரசு படகையும் மீனவர்களையும் விடுதலை செய்வதாக உறுதியளித்தால் மட்டுமே இந்த போராட்டம் கைவிடப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கச்சி மடத்தில் நடைபெறும் இந்த மீனவர்களை உண்ணாவிரத போராட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தங்கச்சிமடம் முழுவதும் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீனவர்களின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story




